உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17வது மெகா தடுப்பூசி முகாமில் 15.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2022-01-02 15:09 GMT   |   Update On 2022-01-02 15:09 GMT
ஒரு மாதத்தில் 15 - 18 வயதுள்ள சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தமிழகம் முழுவதும் இன்று 17-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சென்னையில் மட்டும் 1600 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

17வது மெகா தடுப்பூசி முகாமில் 15,16,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 86.95% பேருக்கு முதல் தவணையும், 60.71% பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

‘சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் நாளை தொடங்க உள்ளது. ஒரு மாதத்தில் 15 - 18 வயதுள்ள சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புகிறோம். தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது’ என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Tags:    

Similar News