உள்ளூர் செய்திகள்
தயார் நிலையில் படுக்கைகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 1,240 படுக்கைகள்

Published On 2022-01-02 09:41 GMT   |   Update On 2022-01-02 09:41 GMT
மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,240 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படு பவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பரிசோதனையும் செய்யப்பட்டு அவர்கள் 7 நாள் தனிமைபடுத்தப்படுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் மீண்டும் தீவிரமாக களப்பணியில் இறங்கி  உள்ளனர். இது தொடர்பாக நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே தமிழக அரசிடம் இருந்து அறிவுறுத்தல்கள் வந்துள்ளது. அதன்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொரோனா 1 மற்றும் 2-வது அலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படுக்கைகள் மீண்டும் புனரமைக்கப்பட்டுளளது.

தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 1,240 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளும் சரி பார்க்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளது. தேவைக்கு அதிகமாக மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் 3 பிளாண்டுகளில் 32 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பெரிய அளவிலான சிலிண்டர்களும் கையிருப்பில் உள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். இதுபோக ஒமைக்ரான் சிகிச்சைக்காக தனியாக 100 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News