உள்ளூர் செய்திகள்
பெண் சாமியார் அன்னபூரணி

பெண் சாமியார் அன்னபூரணி மீது 5 அமைப்புகள் பரபரப்பு புகார்

Published On 2021-12-30 09:55 GMT   |   Update On 2021-12-30 11:08 GMT
அன்னபூரணியின் புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களின் எதிர்ப்பு காரணமாக அவர் தனது நிகழ்ச்சிகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:

பெண் சாமியார் அன்னபூரணி பற்றிய தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக வெளியாகி கொண்டு இருக்கின்றன.

புத்தாண்டையொட்டி செங்கல்பட்டில் அவர் நடத்த இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற வீடியோக்களும், சாமியார் ஆன பிறகு அவர் அருள்வாக்கு கூறும் வீடியோக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

இதையடுத்து பெண் சாமியார் அன்னபூரணி சர்ச்சை சாமியாராக பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டார்.

குடும்ப பிரச்சினைகளை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் அன்னபூரணி பேசிய பேச்சுக்களையும், அவர் சாமியார் ஆன பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோக்களையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 5 இந்து அமைப்புகள் இணைந்து அன்னபூரணி மீது பரபரப்பான புகார் மனுக்களை அளித்துள்ளன.

அகில பாரத இந்து மக்கள் கட்சியின் தலைவர் சிவமுருகன், பாரத் முன்னணியின் தலைவர் சிவக்குமார், வீரத்தமிழர் இந்து சேனா அமைப்பின் தலைவர் தென்னரசு, தமிழ்நாடு இந்து சேவா சங் அமைப்பின் தலைவர் ஸ்டாலின் மற்றும் ராஷ்டீரிய சனாதன தர்ம சங்க அமைப்பினர் புகார் மனுக்களை அளித்தனர்.

அதில், “அன்னபூரணி, சாமியார் என்று கூறிக்கொண்டு பொய் பிரசாரம் செய்கிறார். தனி மனித ஒழுக்கம் இல்லாத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு மக்களை மூளை சலவை செய்து வரும் அன்னபூரணி மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதுடன் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் மீது இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த புகார் மனுக்கள் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் பெண் சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் இருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணியின் புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களின் எதிர்ப்பு காரணமாக அவர் தனது நிகழ்ச்சிகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பெண் சாமியார் அன்னபூரணி மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையே பெண் சாமியார் அன்னபூரணியின் கணவர் அரசு என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்துள்ளார். அவரது மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று கமி‌ஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்த அன்னபூரணி தனது கணவரின் இயற்கையான மரணத்தை பலர் திசை திருப்புவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இருப்பினும் அரசுவின் மரணம் தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மரணம் அடைந்தது எப்படி? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்ட தொடங்கி உள்ளனர். இதன் முடிவில் பெண் சாமியார் அன்னபூரணியின் கணவரான அரசு மரணத்தில் ஏதாவது மர்மங்கள் இருக்குமா? என்பதும் தெரிய வரும் என்பதால் சாமியார் அன்னபூரணி விவகாரத்தில் பரபரப்பு நீடிக்கிறது.



Tags:    

Similar News