உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சோலார் மின் உற்பத்தி திட்டம் - விவசாயிகள் பயனடைய வேண்டுகோள்

Published On 2021-12-30 08:05 GMT   |   Update On 2021-12-30 08:05 GMT
தமிழக அரசு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புடன் சோலார் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் மத்திய அரசின் ‘கிசான் கோஷ்தீஸ்’ கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், ‘அட்மா’ திட்ட வட்டார தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாஷாலினி வரவேற்றார்.

இதில் மாவட்ட எரிசக்தி முகமை உதவிப் பொறியாளர் முரளிதரன் பேசியதாவது:

தமிழக அரசு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புடன் சோலார் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60 சதவீத மானியம் வழங்கப்படும். 

உதாரணமாக  விளை நிலங்களில் 7.5 எச்.பி., மோட்டார் இயக்க சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தினால் ஆண்டுக்கு 14,850 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சோலார் கட்டமைப்பு வாயிலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சுய தேவைக்கும் பயன்படுத்தலாம்.

மின்வாரியத்துக்கும் ஒரு யூனிட் ரூ.2.28க்கு விற்பனை செய்யலாம். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏற்கனவே இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைவதால் தடையில்லா மும்முனை மின்சாரம் பெற முடியும்.

மேலும் விபரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள எரிசக்தி முகமை அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கதிரவன் பேசியதாவது:

நீர், நில வளத்தை பாதுகாப்பது அவசியமாகும். பல்வேறு காரணங்களால் 30 சதவீத நிலம் உயிர்ப்பு இல்லாமல் மாற்றப்பட்டு தொடர் பிரச்சினைகள் ஏற்படுகிறது. நில வளம் குறித்து தெரியாமல் பல்வேறு ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதேபோல் நீர் வளத்தையும் பாதுகாக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சும் நடைமுறையை விவசாயிகள் கைவிட வேண்டும். மண் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே சாகுபடியில், எதிர்பார்க்கும் மகசூலை பெற முடியும். 

மண்ணின் இயல்பு தன்மையை மீட்க உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் பயன்பாட்டை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News