உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கள் இறக்கும் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

Published On 2021-12-29 10:35 GMT   |   Update On 2021-12-29 10:35 GMT
கள் போதை பொருள் என்று நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என்று கள் இயக்கத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டு உள்ளது.
பல்லடம்:

ஜனவரி 21-ல் நடைபெற உள்ள “கள்” இறக்கும் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

கள் இயக்கம் சார்பில் கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் ஜனவரி 21 ல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெறும் என “கள்” இயக்கத் தலைவர் நல்லசாமி அறிவித்துள்ளார். 

இந்தப்போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளிப்பதுடன் கள் இறக்கி விற்பதற்கு உறுதுணையாக உழவர் உழைப்பாளர் கட்சி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கள் உடல்நலத்தை கெடுக்கக்கூடிய போதைப் பொருள் அல்ல.கள் போதை பொருள் என்று நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என்று கள் இயக்கத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் கள் போதைப்பொருள் என்று நிரூபிக்கவில்லை .இதுவே கள் போதைப்பொருள் அல்ல என்பது நிரூபணமாகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கள் இறக்குவதும்,அதனை பருகுவதும் மக்களுக்கான உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.ஆனால் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கான தடை நீடிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் 

உடல் நலத்தை பெரிதும் கெடுத்து நோயில் தள்ளி உயிர்களை காவு வாங்கும் பிராந்தி, விஸ்கி போன்ற போதை மதுபானங்களை விற்க அனுமதித்து ,அதில் முறைகேடாக பார்களை அனுமதித்து சில லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாக்கும் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கள் இறக்க ஏன் அனுமதிக்க கூடாது என்று தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அரசே கள் இறக்க அனுமதி கொடுக்கும் வகையில் நியாயத்தின் அடிப்படையிலும் தார்மீக உரிமையின் அடிப்படையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க ஜனவரி 21-ல் நடைபெறும் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டத்தில் அனைத்து உழவர்களும் பங்கேற்க வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News