உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அவிநாசியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்

Published On 2021-12-28 06:35 GMT   |   Update On 2021-12-28 06:35 GMT
அவிநாசி காவல் நிலையத்தில் இருந்தபடியே, ‘சி.சி.டி.வி.’ கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அவினாசி:

அவிநாசியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பிரதான ரோட்டில் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. அதே நேரம் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கின்றன. 

இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த அவிநாசி காவல் நிலைய எல்லை முழுக்க, ‘சி.சி.டி.வி.’ கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. 

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், ரங்கா நகர், கைகாட்டி ரவுண்டானா, தாலுகா அலுவலகம் சந்திப்பு, சேவூர் ரோடு என பிரதான இடங்களில் 72 ‘சி.சி.டி.வி’ கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ’அவற்றின் கட்டுப்பாட்டு அறையை, அவிநாசி காவல் நிலையத்தில் இருந்தபடியே, ‘சி.சி.டி.வி.’ கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குள் நுழையும் வாகனங்களை கண்காணிப்பது, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் பிடித்து  நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் எளிதாகும்‘ என போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

முதற்கட்டமாக அவிநாசி தாலுகா அலுவலக சந்திப்பு சாலை உள்ளிட்ட 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

சி.சி.டி.வி. பொருத்தும் பணிக்கு அரசின் சார்பில் பிரத்யேக நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை என்ற சூழலில் தனியாரின் ஒத்துழைப்பால் மட்டுமே பொருத்தும் பணி சாத்தியம். அவிநாசியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் குற்றச்செயல்கள் நடக்க கூடாது என்ற சமூகநலன் சார்ந்த விஷயத்தில் அக்கறை கொண்ட சில தனியார் நிறுவனத்தினர் ‘சி.சி.டி.வி.’ கேமரா பொருத்தும் பணிக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். 

உள்ளூரில் உள்ள நிறுவனத்தினர் மட்டுமின்றி பொள்ளாச்சியில் உள்ள நிறுவனத்தினர் கூட உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர் அவிநாசி காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News