உள்ளூர் செய்திகள்
பாபநாசம் அணையில் கரையோரத்தில் நின்ற முதலையை படத்தில் காணலாம்.

பாபநாசம் அணையில் முதலை நடமாட்டம் - சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு

Published On 2021-12-26 02:00 GMT   |   Update On 2021-12-26 02:00 GMT
பாபநாசம் அணையில் முதலை நடமாட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் முதலைகள் கிடப்பதாக கூறப்படுகிறது. அணையில் கிடக்கும் முதலைகள் அவ்வப்போது வெளியில் வந்து அணையின் கரையோரங்களில் கிடப்பதை சுற்றுலா பயணிகள் பலர் பார்த்து உள்ளனர்.

குறிப்பாக கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படும் போது, முதலை தண்ணீரில் கிடப்பதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் அணையின் பாதுகாப்பு பணியில் தினமும் ஆயுதப்படை போலீசார், மின்வாரியத்தினர் ஈடுபட்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில் 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 138 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் பாபநாசம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அணையின் நீர்மட்டம் அளவு கோல் இருக்கும் இடத்தின் கரையில் சுமார் 6 அடி நீளம் உள்ள முதலை நடமாடியது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஒரு சிறிய கட்டையை தூக்கி எறிந்தனர். பின்னர் அந்த முதலை அணை தண்ணீருக்குள் சென்றது.

இதை அங்கு இருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News