உள்ளூர் செய்திகள்
தீ விபத்து ஏற்பட்டதையும், தீயணைப்பு வீரர்கள் அணைப்பதையும் படத்தில் காணலாம்.

வெள்ளகோவில் நூற்பாலையில் தீ விபத்து- பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2021-12-24 11:04 GMT   |   Update On 2021-12-24 11:04 GMT
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் திருச்சி-கோவை சாலையில் காடையூரான்வலசு அருகே தனியாருக்கு சொந்தமான நூல் நூற்பாலை உள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட வட மாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பகல் பஞ்சு அடுக்கி வைத்திருந்த கட்டிடத்தில் திடீரென புகை வந்துள்ளது.

இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

அப்போது தீ கட்டுக்குள் அடங்காததால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காங்கேயம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வாகனங்களுக்கு உதவியாக வெள்ளகோயில் மற்றும் காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து உதவி செய்தனர். இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான கட்டிடம் மற்றும் பஞ்சுகள் எரிந்து  நாசமாயின.

பகலில் பிடித்த தீயை நேற்று இரவு வரை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News