உள்ளூர் செய்திகள்
கைது

மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரெயிலில் புகுந்து பயணிகளிடம் நகை-செல்போன் திருட்டு: 4 வாலிபர்கள் கைது

Update: 2021-12-24 07:47 GMT
மதுரையில் ஓடும் ரெயிலில் கொள்ளையர்கள் அத்துமீறி புகுந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை:

திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் சம்பவத்தன்று இரவு மதுரைக்கு புறப்பட்டு வந்தது. அந்த ரெயில், மதுரை தத்தனேரியில் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது 4 மர்ம நபர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளுக்குள் புகுந்தனர்.

அந்த ரெயிலில் திண்டுக்கல்லை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் கோபிநாத், டேவிட்ராஜா ஆகியோர் பயணம் செய்தனர். 4 பேர் கும்பலுக்கும் கோபிநாத், டேவிட்ராஜா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கியது. அதன் பிறகு அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து கோபிநாத், டேவிட்ராஜா ஆகியோர் மதுரை ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

மதுரையில் ஓடும் ரெயிலில் கொள்ளையர்கள் அத்துமீறி புகுந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி. பொன்னுசாமி உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம், ஏட்டுகள் செல்லப்பாண்டி, விஜய ராஜா, செல்வ கணேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரெயில்வே ஊழியர்களை தாக்கி செல்போன் மற்றும் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, செல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஅர்சத், (23), ஆஷிக் (22), ஷாருக்கான் (22) மீனாம்பாள்புரம் கார்த்திக் (22) என்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News