உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் விருது- தொல்.திருமாவளவன் நாளை வழங்குகிறார்

Update: 2021-12-23 09:27 GMT
விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் விருதை தொல். திருமாவளன் நாளை வழங்குகிறார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடக்கிறது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் விருதை தொல். திருமாவளன் வழங்குகிறார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:-

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த விருதினை பெற்றவருக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம் மற்றும் ரூ.25 ஆயிரம் பொற்கிழி ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பின்னர் 2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதினை பெறுவோருக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம், ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுவோரை ஊக்கப்படுத்துவதும், தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப்படுத்துவதும், தலித் மற்றும் பிற சமூகத்தினர் இடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும், சமூகநீதிக்கும், தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இவ்விழா ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட 79 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான விருதுகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (அம்பேத்கர் சுடர்), ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ (பெரியார் ஒளி), நெல்லை கண்ணன் (காமராசர் கதிர்), பி.வி.கரியமால் (அயோத்தி தாசர் ஆதவன்), பஷீர் அகமது (காயிதேமில்லத் பிறை), ராமசாமி (செம்மொழி ஞாயிறு) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

இவ்விழாவில் விடுதலை சிறுத்தைகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருது வழங்கும் விழாவிற்கு தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., துரை ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் இடத்தை தலைமை நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாவரசு, மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், இரா.செல்வம், செல்லத்துரை உள்ளிட்டவர்கள் இன்று பார்வையிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News