உள்ளூர் செய்திகள்
விழாவில் பங்கேற்றவர்கள்.

34-வது பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி 129 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்

Published On 2021-12-20 09:05 GMT   |   Update On 2021-12-20 09:05 GMT
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழாப் பேரூரை நிகழ்த்தினார்.
சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று காலை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

விழாவில் கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை ஏற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 12,814 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் 25 பேருக்கு பி.எச்.டி. பட்டங்கள், 104 பேருக்கு தங்கப் பதக்கம்- வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என 129 பேருக்கு விழா மேடையிலேயே கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு கல்லூரி வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழாப் பேரூரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் சுதா சே‌ஷய்யன் தயாரித்த நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இந்நூலில் புகழ் பெற்ற வல்லுனர்கள் 25 பேரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சே‌ஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், ஆளுமைக் குழு உறுப்பினர்கள், ஆட்சிமன்ற பேரவைக் குழு, நிதிக்குழு உறுப்பினர்கள், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News