உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்

Published On 2021-12-20 06:47 GMT   |   Update On 2021-12-20 06:47 GMT
‘நீட்’ விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுனரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாளை 21-ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கடந்த அக்டோபர் 13-ந்தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு எந்தப்பயனும் இல்லை. அதன்பின் நவம்பர் 27-ந் தேதி முதலமைச்சர் மீண்டும் கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் கடந்த 17-ந்தேதி இது தொடர்பாக கவர்னரை சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக கவர்னர் இனியும் தாமதம் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

அதே நேரத்தில் கவர்னர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மட்டுமே காரணம் காட்டி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் கடமையிலிருந்து தமிழக அரசு விலகி விடக்கூடாது.

‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.



தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக்கூடும். அதற்கு முன்பாக அடுத்த ஆண்டில் தமிழகத்தில் நீட் உண்டா... இல்லையா? என்பதை தமிழக அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும்.

‘நீட்’ விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுனரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? எவ்வளவு காலத்திற்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும்? வரும் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டா... இல்லையா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவும், தமிழ்நாட்டு மாணவர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News