உள்ளூர் செய்திகள்
சரண் அடைந்த கர்நாடக பெண் மாவோயிஸ்ட் பிரபாவுடன் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் ஏ.ஜி.பாபு, திருப்பத்தூர் மாவட்ட

தேடப்பட்டு வந்த கர்நாடக பெண் மாவோயிஸ்ட் சரண்: திருப்பத்தூர் காவல்துறை தகவல்

Published On 2021-12-19 14:30 GMT   |   Update On 2021-12-19 14:30 GMT
சரணடையும் மாவோயிஸ்ட்டுகளின் மறுவாழ்வு புனரமைப்புக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:


கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்த பிரபா, சிபிஐ மாவோயிஸ்ட் மாநில குழு உறுப்பினராக  இருந்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக பணியாற்றி உள்ளார்.  

சந்தியா, மாது, நேத்திரா, விண்டு ஆகிய பெயர்களில் செயல்பட்டு வந்த இவர் மீது, கர்நாடகா மாநிலம் சிமோகா, உடுப்பி மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலவையில் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக பிரபாவை கர்நாடகா காவல்துறை அறிவித்திருந்தது.  இவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் பெண் மாவோயிஸ்ட் பிரபா சரணடைந்தார்.  இது குறித்து வேலூர் 
சரக காவல் துணை தலைவர் ஏ.ஜி.பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

சமுதாயத்துடன் இணைந்து வாழும் வகையில் அமைதியான வாழ்வை விரும்பி காவல்துறை முன் சரணடைய விரும்புவதாக 
திருப்பத்தூர் க்யூ பிரிவு போலீசாரிடம் பிரபா தெரிவித்துள்ளார். அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
பாலகிருஷ்ணன் முன்பு நேற்று அவர் சரணடைந்தார். பிரபாவின் கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மாவோயிஸ்ட் இயக்க மத்திய குழு 
உறுப்பினராக உள்ளார். 25 வழக்குகளில் தொடர்புடைய அவரை, நவம்பர் 9ம் தேதி கேரள மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். 

தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்பும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் வாழ்வை புனரமைத்து, அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்துக் கொடுக்கும் வகையில், சரணடைதல் புனரமைப்புக் கொள்கையை தமிழக அரசு வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது. சரணடையும் மாவோயிஸ்ட்டுகளின் மறுவாழ்வு புனரமைப்புக்கு அனைத்து உதவிகளும்  வழங்கப்படும்.

இவ்வாறு வேலூர் சரக காவல் துணை தலைவர் ஏ.ஜி.பாபு குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News