உள்ளூர் செய்திகள்
தமிழக அரசு

வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு

Published On 2021-12-18 03:05 GMT   |   Update On 2021-12-18 03:05 GMT
பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மோட்டார் வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் (தகுதிச்சான்று புதுப்பிப்பு, அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ்) செல்லுபடியாகும் காலத்தை 31.10.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அரசுக்கு போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு பேருந்து கழகம் (சேலம்) நிர்வாக இயக்குநர்களிடம் இருந்தும், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவரிடம் இருந்தும் கடிதங்கள் பெறப்பட்டன.

மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 31.12.2021 வரை நீட்டித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 31.12.2021 வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதியும், வாகனத்தின் அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை 31.12.2021 வரை நீட்டித்து உரிய உத்தரவை வழங்க போக்குவரத்து ஆணையர் பரிந்துரை செய்திருக்கிறார்.

இந்த பரிந்துரையை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்கிறது. மேலும், அரசு போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை 31.12.2021 வரை நீட்டித்து, இதுதான் கடைசி நீட்டிப்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News