உள்ளூர் செய்திகள்
செல்லூர் ராஜூ

உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது பாஸ்ட் புட் அரசியல்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2021-12-17 08:25 GMT   |   Update On 2021-12-17 08:25 GMT
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை ஒட்டுமொத்த மக்களும் ஆதரிப்பார்கள் என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை:

தி.மு.க. அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செல்லூர்  50 அடி ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. என்ற இயக்கத்தை வென்றவரும் இல்லை, கடவுளை கண்டவரும் இல்லை. கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்த அ.தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது.

மக்கள் எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு தான் வாக்களித்தோம். ஏன் நீங்கள் வெற்றி பெறவில்லை என்று கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்கி விட்டது. போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை. இந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள் ஆனால் தரவில்லை. கியாஸ் விலையில் 100 ரூபாய் குறைப்போம் என்றார்கள் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள். எதுவும் நடக்கவில்லை.

எனவே தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

உதயநிதியை மக்கள் அமைச்சராக்க விரும்புகிறார்கள் என்று தி.மு.க.வினர் அவர்களாகவே கூறி வருகிறார்கள். கலைஞர், மு.க.ஸ்டாலினை அரசியலில் நிதானமாக, பக்குவமாக வளர்த்தார். ஆனால் உதயநிதியை அமைச்சராக நினைப்பது பாஸ்ட்புட் அரசியலாகும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 100 ரூபாயில் தொடங்கி 2500 ரூபாய் வரை மக்களுக்கு கொடுத்து உதவியது அதிமுக அரசு. ஆனால் தற்போது தி.மு.க. அரசு பொங்கல் பரிசு பற்றி இதுவரை எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வருகிறது. கடைசியாக நாங்கள் 2500 ரூபாய் கொடுத்தோம்.

எனவே வருகிற பொங்கலுக்கு 2.15 கோடி குடும்பத்தினருக்கு தலா 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறோம். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி தமிழக மக்களின் கோரிக்கையாக ஏற்று நிறைவேற்றி தரவேண்டும்.

மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள் எங்களை அடிக்கடி போராட தூண்டாதீர்கள். அ.தி.மு.க. மக்கள் விரும்பும் கட்சி. மக்களுக்காகவே எப்போதும் போராடும். எனவே வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை ஒட்டுமொத்த மக்களும் ஆதரிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News