உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவத்தில் 40 லட்சம் பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2021-12-17 04:24 GMT   |   Update On 2021-12-17 06:27 GMT
தொடர் சிகிச்சை, கண்காணிப்பு, கண்டுபிடிப்புகள் மூலம் வரும் காலத்தில் நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளுக்காக லட்சக்கணக்கானவர்கள் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்கள்.

அவர்களில் பலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் வேறு பாதிப்புகள் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. பலர் பரிசோதனை செய்யாமல் இந்த மாதிரி வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நோய்முற்றிய பிறகு தெரியவரும்போது காப்பாற்ற முடியாமலும் ஆகிவிடுகிறது.

இதை தவிர்ப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வீடு வீடாக சென்று மாத்திரைகள் வழங்குகிறார்கள். பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 40 லட்சத்து 9 ஆயிரத்து 643 பேர் பலன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ரத்த அழுத்தத்துக்கு 16 லட்சத்து 53 ஆயிரத்து 215 பேரும், 11 லட்சத்து 30 ஆயிரத்து 355 பேர் சர்க்கரை வியாதிக்கும் மருந்து வாங்கி சென்றுள்ளார்கள்.

2 லட்சத்து 56 ஆயிரத்து 788 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் சிகிச்சை, கண்காணிப்பு, கண்டுபிடிப்புகள் மூலம் வரும் காலத்தில் நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அவர் கூறினார்.


Tags:    

Similar News