உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 17-ந் தேதி உருவாகிறது

Published On 2021-12-15 07:26 GMT   |   Update On 2021-12-15 07:26 GMT
வருகிற 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (வியாழன்) முதல் 19-ந்தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

வருகிற 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் இன்று, நாளை மற்றும் 19-ந் தேதிகளில் குமரிக்கடல் பகுதி மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் தலா-3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News