உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-12-14 05:43 GMT   |   Update On 2021-12-14 06:49 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 6-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 2-ந்தேதி அக்கட்சி அறிவித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

தேர்தல் அறிவிப்பு மிக குறுகிய கால இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 21 நாட்களாவது இடைவெளி விட வேண்டும்.

வேட்புமனுவுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வாக்காளர் பட்டியலும் வெளியிடவில்லை. சுமார் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியினர் வாக்களிக்க ஒரு நாள் போதாது. மொத்தத்தில் இந்த தேர்தல் அறிவிப்பு என்பதே கபடநாடகமாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகவும், இணைஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யவே, இது போல கட்சி நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

எனவே இந்தத் தேர்தலில் தடை விதிக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற நிர்வாகிகள் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.



இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வானதை எதிர்த்து தொடரப்பட்ட ஓசூர் ஜெயச்சந்திரன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நீதிபதிகள் கூறினார்கள். அ.தி.மு.க. தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.

Tags:    

Similar News