உள்ளூர் செய்திகள்
சிபிஎஸ்இ

பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால் குழந்தைகள் ஒழுக்கம் கெட்டுவிட்டது?- சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் அதிர்ச்சி

Published On 2021-12-13 07:36 GMT   |   Update On 2021-12-13 07:36 GMT
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 12-ம் வகுப்புக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. 10, 12-ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலம் வினாக்கள் விடையளிக்க முடியாத அளவுக்கு கடினமாக கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மீது மற்றும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால், குழந்தைகளின் ஒழுக்கம் கெட்டு விட்டது, குழந்தைகள் மீது உள்ள பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் முற்றிலும் அழிந்து விட்டது. மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக ஒரு பத்தி கொடுக்கப்பட்டு அதற்கான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இந்த வினா கல்வித்துறையில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. கல்வியாளர்கள், சமூக வலைதளங்களில் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இது குறித்து கொளத்தூர் எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி மிகவும் கண்டிக்கத்தக்கது. கடும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மாணவிகள் கணிசமான அளவிற்கு எழுதும் ஒரு தேர்வில் ஆண்களுக்கு சாதகமான ஒரு கேள்வி அமைந்துள்ளது. இது ஆண்-பெண் சமத்துவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். மீண்டும் கற்காலத்திற்கு செல்கிறோமோ என்கிற நிலை உருவாகி உள்ளது.

இந்த வினாத்தாளை தயாரித்த குழுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பொது பள்ளிக்கான மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:-

ஒரு பாடத்திட்டம் என்பது வயதுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. மதிப்பீடு என்பது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட ஒரு கேள்வி கருத்துருவாக்கத்துக்கு பயன்படுகிறது.

அதில் ஆண்களுக்கு, பெண்கள் அடங்கிப் போகக்கூடிய சமூக கட்டமைப்பு, அத்தகைய கட்டமைப்புதான் ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும் என்ற புரிதலை உருவாக்குகிற வகையில் உள்ளது. எனவே அணுகு முறையில் பாடத் திட்டங்களும், வினாத்தாள்களும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News