உள்ளூர் செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

தி.மு.க. கருத்து சுதந்திரத்தை அடக்க முயற்சிக்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2021-12-13 07:11 GMT   |   Update On 2021-12-13 07:11 GMT
ஒருவர் சொல்லும் கருத்துக்களை சொல்ல விடாமல் அடக்குவதை விட அதில் இருக்கும் உண்மைகளை ஆராய்வது தான் நல்ல அரசுக்கு அழகு என்று முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மாரிதாஸ் கைது மற்றும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பற்றி கூறியதாவது:-

மாரிதாஸ் மீது போடப்பட்டுள்ள முதல் வழக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் இந்த கருத்துக்கள் எல்லோரும் சொல்லி வருவது தான். பயங்கரவாதம் தலை தூக்கி விட கூடாது என்பதுதான் எல்லோரது எண்ணமும்.

நடக்கும் பல நிகழ்வுகள் ஒரு சாதாரண நிகழ்வுகளாகவோ, சாதாரணமாக நிகழ்த்தி விடக்கூடியதாகவோ இல்லை என்ற வகையில் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அதற்கு ஒரு உதாரணம் தென்காசியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு கடை எரிக்கப்பட்ட சம்பவம். அந்த கடையில் பச்சை தழைகள் கூட எரியும் வகையில் எரிவதற்கான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக இன்னும் முறையான நடவடிக்கைகள் இல்லை.

அதேபோல் மாரிதாஸ் மீது போடப்பட்டுள்ள 2-வது வழக்கு கண்கூடாகவே தெரிகிறது. அது பழிவாங்கும் நடவடிக்கை. ஏனெனில் இந்த புகார் கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. வழக்குப் போட வேண்டுமென்றால் அப்போதே போட்டிருக்கலாம். இப்போது திட்டமிட்டு பழிவாங்கும் செயலை அரசு செய்கிறது என்பது தெரிகிறது.

கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாக பேசுவது தி.மு.க. தான். இப்போது அதே தி.மு.க. கருத்து சுதந்திரத்தை அடக்க முயற்சிக்கிறது. ஒருவர் சொல்லும் கருத்துக்களை சொல்ல விடாமல் அடக்குவதை விட அதில் இருக்கும் உண்மைகளை ஆராய்வது தான் நல்ல அரசுக்கு அழகு.

தமிழகத்தில் போதை பொருள் கடத்தல், பழக்கம் அதிகரித்து வருகிறது என்று நான் சில மாதங்களாக கூறி வருகிறேன். இந்த மாதிரி போதைப்பொருட்களை கடத்துவது பயங்கரவாத செயலாகத்தான் இருக்க முடியும் என்பதையும் எச்சரித்து உள்ளேன்.

இப்போது தான் தமிழக டி.ஜி.பி. மூன்று மாதங்களுக்குள் போதைப் பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று காவல்துறையை முடுக்கி விட்டுள்ளார். அரசு தங்கள் தவறுகள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி முடக்க முயற்சிப்பது மீண்டும் மீண்டும் தவறுகள் அதிகரிக்கத்தான் வழி வகுக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News