உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடி

அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்- ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Update: 2021-12-12 06:13 GMT
ரஜினி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலக தமிழர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிக்கு இன்று 72-வது பிறந்தநாள் ஆகும்.

பிறந்தநாளை முன்னிட்டு மகான்களை சந்தித்து ஆசி பெறுவதை ரஜினி முன்பு வழக்கத்தில் வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது பண்ணை வீட்டுக்கு சென்று பிறந்த நாள் கொண்டாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

வழக்கம் போல இந்த ஆண்டும் ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ரஜினிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ரஜினிகாந்த் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு ரஜினி நன்றி கூறினார்.

ரஜினி இன்று காலை பெங்களூரில் உள்ள தனது மூத்த சகோதரர் சத்ய நாராயணாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆசி மற்றும் வாழ்த்துக்களை போனில் பெற்றார்.

இது தொடர்பாக ரஜினியின் சகோதரர் சத்யநாராயணாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இன்று காலை நான் தொலைபேசியில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அவர் மக்கள் நினைப்பது போல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். நூறாண்டுக்கும் அவர் சிறப்பாக வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இங்கு பெங்களூரூவில் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் பவுண்டே‌ஷன் மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு டி.என்.பி.சி. தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அன்னதானம், ரத்ததான முகாம் உள்ளிட்ட முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இதுவே அவரை ஆரோக்கியமாக வாழ வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News