உள்ளூர் செய்திகள்
முகாமில் ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

13 மெகா சிறப்பு முகாம் மூலம் 2.43 கோடி பேருக்கு தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2021-12-11 07:28 GMT   |   Update On 2021-12-11 09:58 GMT
ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

14-வது தடுப்பூசி மெகா முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, வேலு உள்ளிட்டவர்கள் சென்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாக மாறிவுள்ளது. இதுவரையில் 7 கோடியே 54 லட்சத்து 2 ஆயிரத்து 698 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 94 லட்சத்து 15 ஆயிரத்து 147 பேருக்கு போடவேண்டி உள்ளது. அதனை இலக்காக வைத்து இந்த பணி நடந்து வருகிறது.

இதுவரையில் 13 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 3 லட்சத்து 32 ஆயிரத்து 442 மையங்களில் முகாம்கள் நடந்துள்ளது. இதன் மூலம் 2 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 78 லட்சம் மக்கள் உள்ளனர். இதுவரையில் முதல் தவணை தடுப்பூசி 85 சதவீதம் போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 60 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. 13 மெகா முகாம்கள் மூலம் 20,800 இடங்களில் சிறப்பு மையங்கள் நடந்துள்ளன.



இதன் மூலம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 950 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் உருமாறி வருவதால் இந்த பேரிடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. அதனால் மக்கள் தடுப்பூசி முன்வரவேண்டும்.

புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதனால் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 80 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இப்போதே 81 சதவீதத்தை கடந்து விட்டோம். இன்னும் 10 சதவீதத்தை இலக்காக கொண்டு 90 சதவீதத்தை அடைய செயல்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களிலும் தடுப்பூசி மையங்கள் தற்போது செயல்படுகிறது. தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

2-வது தவணை தவறியவர்கள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக செல்கிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் தினமும் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News