உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

ஆன்லைன் அபராதத்தால் திருப்பூரில் 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து பயணம்

Published On 2021-12-09 09:22 GMT   |   Update On 2021-12-09 09:22 GMT
பெண்கள் பலர் தங்களது கூந்தல் கொட்டி விடுமோ என்று பயந்து தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுகின்றனர் .
திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதிகளில் தற்போது இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் ஆன்லைன் அபராதம் காரணமாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க தொடங்கி உள்ளனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சோதனையில் ஈடுபடும் போலீசார், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களின் நம்பரை செல்போனில் படம் பிடித்து அதன் மூலம் ஹெல்மெட் அணியாத நபரின் செல்போன் எண்ணுக்கு அபராதம் விதித்தது குறித்து தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பலர் ஹெல்மெட் அணிந்து வருகின்றனர். 

ஆனால் பெண்கள் பலர் தங்களது கூந்தல் கொட்டி விடுமோ என்று பயந்து தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். 

அதேபோன்று முதியவர்கள், இளைஞர்கள் சிலர் மட்டுமே தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். விரைவில் ஆன்லைன் அபராதம் அவர்களுக்கு விதிக்கப்பட்டவுடன் அவர்களும் தலைக்கவசம் அணிய தொடங்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். 

இதேபோன்று திருப்பூர் புறநகர் பகுதிகளான தாராபுரம், காங்கயம், பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் 30 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டுகின்றனர். 

திருப்பூர் மாநகர பகுதி போல ஆன்லைன் அபராதத்தை தீவிரப்படுத்தினால் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வாகனங்களை மக்கள் இயக்குவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். திருப்பூர் மாநகரத்தை பொறுத்தவரை விரைவில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட கூடிய சூழ்நிலையை பார்க்கலாம். 

ஆன்லைன் அபராதத்திற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பலர் வரவேற்பு தந்துள்ளனர். இதனால் திருப்பூர் மாநகர பகுதிகளில் உயிர் சேதம் குறைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News