உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பகுதியில் ஓடைகள், தரைமட்ட பாலங்களை மூழ்கடிக்கும் வெள்ளம் - தவிக்கும் விவசாயிகள், பொதுமக்கள்

Published On 2021-12-08 08:16 GMT   |   Update On 2021-12-08 08:16 GMT
இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
உடுமலை:

உடுமலை ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் இருந்து கொங்கலக்குறிச்சிக்கு 3 கி.மீ., தொலைவுக்கு இணைப்பு ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டை கிராம மக்களும் பல்வேறு விளைபொருட்களை எடுத்துச் செல்ல விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். வழித்தடத்தில் பவளபுரம் என்ற குடியிருப்பும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடிவதில்லை. எனவே ஆலாம்பாளையம் அல்லது மடத்தூர் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. 

சமீபத்தில் பெய்த கனமழையால் பல நாட்களாக ஓடையில் நீரோட்டம் அதிகரித்து அத்தியாவசிய தேவைக்குக்கூட இணைப்பு ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு கிராம மக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகினர். எனவே உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் ஓடையில் தரைமட்ட பாலம் அமைத்துத்தர வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் பகுதிகளில் தொடர் மழை காரணமாக உப்பாறு ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. உப்பாறு ஓடையின் குறுக்கே வல்லகுண்டாபுரத்திலிருந்து மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 

தற்போது குடிமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் செல்கிறது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும் கலந்துள்ளதால் தரைமட்ட பாலங்களை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த பொருட்களையும், விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களையும் கொண்டு செல்வதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தரைப்பாலம் அமைந்துள்ள பல பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது. 

இதனால் கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தரை பாலங்களை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வல்லகுண்டாபுரம் அருகே உள்ள தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உடுமலை நகர எல்லையில் அமைந்துள்ள தங்கம்மாள் ஓடை பகுதியிலிருந்து ராகல்பாவி கிராமம் வரை விளைநிலங்களின் வழியே இணைப்பு ரோடு உள்ளது. முன்பு ராகல்பாவி சுற்றுப்பகுதி மக்கள் நகருக்கு வரவும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வரவும் இந்த ரோடு அதிகளவு பயன்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருந்ததால் இந்த ரோட்டில், கான்கிரீட் கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. அகல ரெயில்பாதை குறுக்கிடும், சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கும் அவல நிலையும் இருந்தது

அப்பகுதி மக்கள், விவசாயிகள் தொடர் கோரிக்கை அடிப்படையில் ரோடு மேம்படுத்தப்பட்டு சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற, மோட்டார் அறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் ரோட்டில் குறுக்கிடும் ராஜவாய்க்கால் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரோடே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. எனவே இணைப்பு ரோடு வழியாக ராகல்பாவிக்கும், விளைநிலங்களுக்கும் செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பருவமழைக்காலத்தில் ஒட்டுக்குளத்தின் உபரி நீர் மற்றும் மழை நீர் ஓடைகள் வாயிலாக ராஜவாய்க்கால் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மழைக்கு முன்பு பள்ளத்தை தூர்வார  வலியுறுத்தினோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளத்தின் நீரோட்ட பாதையிலுள்ள மண் மேடுகள், கழிவுகள் அடைத்து ரோட்டில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.  தடுப்பணைகளுக்கு போதியளவு தண்ணீர் செல்வதில்லை.

கரைகளும் பல இடத்தில் காணாமல் போயுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ராஜவாய்க்கால் பள்ளத்தில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் கரையிலுள்ள புதர்களை அகற்ற வேண்டும். மண் மேடுகளை அகற்றி தூர்வாரினால், வெள்ளம் தடையின்றி, தடுப்பணைகளுக்கு செல்லும். இணைப்பு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கும் அவலமும் தவிர்க்கப்படும்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News