உள்ளூர் செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேனை அப்பகுதி மக்கள் இணைந்து மீட்க முயற்சித்தபோது எடுத்த படம்.

பாலத்தில் சென்றபோது 25 மாணவர்களுடன் வெள்ளத்தின் நடுவே சிக்கிய பள்ளிக்கூட வேன்

Published On 2021-12-08 03:27 GMT   |   Update On 2021-12-08 03:27 GMT
கமுதி அருகே தரைப்பாலத்தில் சென்றபோது வெள்ளத்தின் நடுவே 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளிக்கூட வேன் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி:

கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து பரளையாற்றிற்கு வைகை தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீரால் செய்யாமங்கலம்-கொடுமலூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 10 நாட்களாக தண்ணீரில் மூழ்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் வரத்து சற்று குறைவாக காணப்பட்டதால் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களுடன் தரைப்பாலத்தை கடக்க முயன்றது.

அந்த பாலத்தில் சென்றபோது அந்த வேன், வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டது. இதனால் அதில் இருந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக பள்ளி குழந்தைகள் ஒவ்வொருவராக வேனில் இருந்து மீட்டனர். இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் வேனும் மீட்கப்பட்டது.

இதைதொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து, அந்த தரைப்பாலம் வழியாக வாகனங்களை அனுமதிக்காமல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News