உள்ளூர் செய்திகள்
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

போடியில் தொடர் மழையால் ஊருக்குள் புகுந்த வெள்ளம்: சிறைச்சாலை வளாகத்திலும் தண்ணீர் சூழ்ந்தது

Published On 2021-12-07 06:58 GMT   |   Update On 2021-12-07 07:31 GMT
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் போடி ரங்கநாதபுரம் குளம் உடைந்து மழை நீர் ஊருக்குள் புகுந்தது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்து வருகின்றனர். போடி அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் இருந்து சிலமலை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் நாட்டாண்மைக்காரக்குளம் தொடர் மழையால் வேகமாக நிரம்பியது.

தற்போது குளம் நிரம்பி கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள் செல்கிறது. குடியிருப்புகளை மழை நீர் சூழந்ததால் அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து தாழ்வான பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான வேறு இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோகிலாபுரம் ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையினால் உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கிளைச்சிறைச்சாலை வளாகத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து அங்கிருந்த விசாரணை கைதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 85 வீடுகள் இடிந்து சேதமடைந்ததுடன் 46 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சேதமதிப்புகளை ஆய்வு செய்யும் பணியில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News