உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கொடிகம்பம் வ.உ.சி.நகர் 5-ம் வீதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

திருப்பூர்-உடுமலையில் பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2021-12-06 08:53 GMT   |   Update On 2021-12-06 11:05 GMT
உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்டது நேருநகர் குடியிருப்பு. இங்கு 50-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை உடுமலை நகரில் சில மணி நேரம் மழை நீடித்தது. 

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேசிய நெடுஞ்சாலை, தளி சாலை உட்பட முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல்  ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. நகர எல்லையில் உள்ள ராஜவாய்க்கால் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்டது நேருநகர் குடியிருப்பு. இங்கு 50-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. பல மணி நேரம் மழை நீடித்ததால் விளைநிலங்கள் அருகிலுள்ள கிராம குளம் உள்ளிட்ட நீராதாரங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. 

இந்த வெள்ளம் நேரு நகர் பகுதியை சூழ்ந்ததால் அச்சமடைந்த மக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடுமலை தாசில்தார் ராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த மக்களை பத்திரமாக மீட்டனர். 

குடியிருப்பில் இருந்து 12 பெண்கள், 6 ஆண்கள், 4 குழந்தைகள் மீட்கப்பட்டு, மலையாண்டிகவுண்டனூர் அரசுப்பள்ளி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

உடுமலை 8-வார்டு பகுதியில் நாராயணகவி பகுதியில் குடியிருப்புகளில் பாதாள சாக்கடை நீரும் மழை நீரும் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

தற்போது வரையும் மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட மின் மோட்டார் வைத்து மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் லேசான தூரலுடன் மழை பெய்தது. 

இன்று காலை 7மணி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு -50, அவினாசி-8, பல்லடம்-42, ஊத்துக்குளி-14, காங் கேயம்-12.20, குண்டடம்-4, திருமூர்த்தி அணை -10, அமராவதி அணை-4, உடுமலை-72, மடத்துக்குளம்-31, திருப்பூர் கலெக்டர் அலுவலகம்-28, திருப்பூர் தெற்கு -48,கலெக்டர் முகாம் அலுவலகம் 87.20. மாவட்டம் முழுவதும் மொத்தம் 415.80மி.மீ.,மழை பெய்துள்ளது. 

மழையின் காரணமாக திருப்பூர் மாநகரில் சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  
Tags:    

Similar News