உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் விடிய விடிய வாகன சோதனை- திருவள்ளூரில் 20 ரவுடிகள் கைது

Published On 2021-12-06 08:52 GMT   |   Update On 2021-12-06 08:52 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 21 குற்றவாளிகளையும், கூடுதல் விலைக்கு மது விற்ற 60 பேர், தடைசெய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் இது தொடர்பாக நேற்று இரவு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய அனைத்து முக்கிய சாலைகளிலும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தார்கள்.

அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் ஏராளமான போலீசார் நேற்று இரவு குவிக்கப்பட்டு இருந்தனர்.

ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களிலும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது.

லாட்ஜுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால் அதுபற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடல் வழியாக அத்துமீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடலோர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீனவ கிராமங்களில் போலீசார் அங்குள்ள மக்களிடம் கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக படகுகள் நடமாட்டம் தென்பட்டால் அதுபற்றி உடனடியாக தகவல் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதே போன்று பக்கத்து மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீஸ் சோதனை நேற்று இரவு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

மாவட்டங்களில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உரிய முகவரி, அடையாள அட்டைகளை வாங்கிய பிறகு லாட்ஜுகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 21 குற்றவாளிகளையும், கூடுதல் விலைக்கு மது விற்ற 60 பேர், தடைசெய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 63 பேர், கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்த 20 ரவுடிகள் பிடிபட்டனர்.

இதில் ஒரு நாட்டு துப்பாக்கி, 16 கத்தி, 37 கிலோ குட்கா, 400 கிராம் கஞ்சா, 337 மதுபாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் நேற்று நடைபெற்ற சோதனையில் சந்தேக நபர்கள் சிலர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதே போன்று தமிழகம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News