உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை- காத்திருக்கும் நேரம் குறைப்பு

Published On 2021-12-06 05:21 GMT   |   Update On 2021-12-06 07:09 GMT
சென்னை விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் காத்திருக்கும் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை:

ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் இந்த வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் ஒமைக்ரான் வைரஸ் நுழையாமல் தடுக்க அரசு, விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

லண்டன், சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை விமான நிலையத்திலேயே நடத்துகின்றனர்.

இதில் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 6-ல் இருந்து 7 மணி வரையிலும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் ஒரு மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.



இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் காத்திருக்கும் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5-ல் இருந்து 6 மணி நேரத்திற்குள்ளும்,ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30-ல் இருந்து 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களில் முடிவுகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவ பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவ பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 450-ல் இருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காபி, ஸ்நாக்ஸ் நியாயமான விலையில் கிடைக்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, வைபை, இலவச டெலிபோன் வசதிகள், பொழுபோக்கு சேனல்களுடன் டிவி, விமானங்கள் வருகை, புறப்பாடு டிஸ்பிளே, வெளிநாட்டு பணங்களை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு நாளுக்கு 700-ல் இருந்து 800 பயணிகளுக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது. பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News