உள்ளூர் செய்திகள்
கமல்ஹாசன்

கருத்து வேறுபாடுகளை ஓரம் கட்டி பணியாற்றுங்கள்- கட்சியினருக்கு கமல் வேண்டுகோள்

Published On 2021-12-06 05:10 GMT   |   Update On 2021-12-06 07:42 GMT
தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது, தொற்றுக்கு எதிரான எல்லாவித தற்காப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக டுவிட்டரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான காரணம் உங்கள் அன்பும் என் நல விருப்பமும் ஆகும். அதனால்தான் மீண்டு வந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

படுத்து கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து அயராது உழைத்த நம் மையத்துக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

தொடர்ந்து செய்யுங்கள். உள்ளாட்சியிலும் சுயாட்சிக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் நம் மையம், கிராமசபையை பெரிதாக மக்களிடம் கொண்டு சேர்த்த சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இல்லாமல் நடக்க இருக்கும் நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி, தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பதே எனது ஆசை.

உங்கள் நடுவில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டு வேலையை பாருங்கள். எப்படி இந்த கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன், ஆனால் மிகவும் முன்ஜாக்கிரதையோடு, பணியாற்ற வேண்டும்.

உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக முக்கியம். நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது, தொற்றுக்கு எதிரான எல்லாவித தற்காப்புகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் எனக்கு முக்கியமாகும்.

இந்த தேர்தலில் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும் தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்து காட்டுவீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Tags:    

Similar News