உள்ளூர் செய்திகள்
மழை

கோதையாற்றில் 43 மில்லி மீட்டர் பதிவு- மழைக்கு மேலும் 23 வீடுகள் இடிந்தது

Published On 2021-12-05 09:32 GMT   |   Update On 2021-12-05 09:32 GMT
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07அடியாக உள்ளது. அணைக்கு 765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னியாகுமரி, மயிலாடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம், நாகர்கோவில் பகுதியில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோதையாறில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-40.2, களியல்-2.6, கன்னிமார்- 15.8, கொட்டாரம்-2.4, குழித்துறை-13.2, மயிலாடி-19.4, நாகர்கோவில்-2.8, தக்கலை-5.6, சாலமோன்- 8.2, மாம்பழத்துறையாறு- 34, ஆரல்வாய்மொழி-27.8, குருந்தன்கோடு-4.8, ஆணைகிடங்கு-29, கோதையார்-43.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 786 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 444 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07அடியாக உள்ளது. அணைக்கு 765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1614 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மழைக்கு மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் 1400-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மேலும் 23 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், விளவங்கோட்டில் 15 வீடுகளும், திருவட்டார் கிள்ளியூரில் தலா இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Tags:    

Similar News