உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளியின் செல்போனுக்கு வந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

Published On 2021-12-05 06:46 GMT   |   Update On 2021-12-05 12:23 GMT
அரசு பல கோடி ரூபாய் செலவழித்து தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. ஆனால் மறுபுறம் தடுப்பூசிகளை போடாமலே போட்டதாக சுகாதாரத்துறையினர் கணக்கு காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி செக்கடி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 62). கூலி தொழிலாளி. இவர் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி புளியங்குடியில் நடைபெற்ற முகாமில் போட்டுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாமல் இருந்த மாரியப்பன் கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது மகன் மாரிசெல்வம் நகராட்சி அலுவலகத்தில் தனது தந்தையின் இறப்பை பதிவு செய்து இறப்பு சான்றிதழும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று அவரது மொபைலுக்கு, இறந்து போன அவரது தந்தை மாரியப்பன் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப்பார்த்து மாரிச்செல்வம் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வரும் வேளையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறுஞ்செய்தி அவர்களுடைய செல்போனுக்கு வரும். ஆனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தி 2 மாதங்கள் ஆனாலும் குறுந்தகவல் வருவதில்லை என பொதுமக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இறந்து 2 மாதங்களுக்கு பின்னர் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதேபோல் பல பகுதியில் குளறுபடிகள் இருந்து வரும் நிலையில், புளியங்குடியில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது.

அரசு பல கோடி ரூபாய் செலவழித்து தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. ஆனால் மறுபுறம் தடுப்பூசிகளை போடாமலே போட்டதாக சுகாதாரத்துறையினர் கணக்கு காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News