உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

ரோசய்யா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-12-04 06:44 GMT   |   Update On 2021-12-04 06:44 GMT
அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட முன்னாள் கவர்னர் ரோசய்யா காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர முதல்-மந்திரியாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர்.

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.

ரோசய்யாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தெலுங்கானா கவர்னரும், புதுவை துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய ரோசய்யா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர்.

அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர், ஆந்திராவில் மிக அதிகமான நாட்கள் அமைச்சராக பதவி வகித்து சரித்திர சாதனை புரிந்தவர். அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் ரோசய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News