உள்ளூர் செய்திகள்
புயல் எச்சரிக்கை கூண்டு

ஜாவத் புயல் எதிரொலி - தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2021-12-03 19:29 GMT   |   Update On 2021-12-03 19:29 GMT
வடக்கு ஆந்திரா, ஒடிசா அருகே ஜாவத் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. 

புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி பூரி அருகே கரைகடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாவத் புயல் எதிரொலியால் தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, நாகை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News