உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வரதனிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2021-12-03 10:26 GMT   |   Update On 2021-12-03 10:26 GMT
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் தொடங்குவதற்காக வரதனிடம் ரூ.1லட்சம்பணம் கேட்டுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வரதன் ( வயது 35) . இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வரதன் கோவில்வழி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
 
இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் தொடங்குவதற்காக வரதனிடம் ரூ.1லட்சம்பணம் கேட்டுள்ளார். இதையடுத்து தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை முத்துசாமிக்கு கொடுத்துள்ளார். 

பணத்தை வாங்கி கொண்ட முத்துசாமி அதன்பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையை கட்டவில்லை. இதுகுறித்து வரதன் முத்துச்சாமியிடம் கேட்டபோது, தான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு, தன்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை தாக்கியதாக வரதன் மீது முத்துச்சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன்  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது நடந்த விவரத்தை கூறினார். 

பின்னர் இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News