உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

70 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- கலெக்டர் தகவல்

Published On 2021-12-03 10:00 GMT   |   Update On 2021-12-03 10:00 GMT
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலம், தம்மணம்பட்டி, அப்பனஅள்ளி கோம்பை உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகள் உள்ளிட்ட 455 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ரேஷன் கடைகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 41 ஆயிரத்து 403 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 4 ஆயிரத்து 827 பேருக்கும் என மொத்தம் 12 லட்சத்து 46 ஆயிரத்து 230 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 34 சதவீதம் பேர் மட்டும்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 697 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளவில்லை. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் வாசு தேவன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News