உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை - திருப்பூர் போலீசில் உடுமலை ராதாகிருஷ்ணன் பரபரப்பு புகார்

Published On 2021-12-02 11:11 GMT   |   Update On 2021-12-02 11:11 GMT
கோமங்கலம் புதூர்அருண்பிரசாத் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இது அ.தி.மு.க.வில் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  
இந்தநிலையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய அ.தி.மு.க. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் துணை செயலாளர் அருண்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோகுல் ஆகியோர் இன்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங்சாயிடம் புகார் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. தகவல்தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் கோமங்கலம் புதூர்அருண்பிரசாத் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் அவரை கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் பற்றி தவறான தகவலை வாட்ஸ் அப்  மூலம் பரப்பி உள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்திட்டதாக போலியான ஆவணத்தை தயார் செய்து  சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். 

பொதுமக்கள் மத்தியில் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கெட்ட பெயரினை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அருண்பிரசாத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
Tags:    

Similar News