உள்ளூர் செய்திகள்
கருப்பட்டி

கலப்படத்தை தடுக்க கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா

Published On 2021-12-02 00:47 GMT   |   Update On 2021-12-02 00:47 GMT
அச்சுவெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவை சர்க்கரை மற்றும் சில வேதிப்பொருள் கலப்படத்துடன் தயாரிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சென்னை:

கலப்படத்தை தடுப்பதற்காக கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) செந்தில் குமார் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சந்தைகளில் கலப்படம் செய்யப்பட்ட பனங்கருப்பட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. உணவு தயாரிப்பு தரம் மற்றும் உணவு சேர்க்கை பொருட்கள் ஒழுங்குமுறை சட்டப்படி, பனங்கருப்பட்டி தயாரிப்புக்கான தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்ட வெல்லம், அச்சுவெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவை சர்க்கரை மற்றும் சில வேதிப்பொருள் கலப்படத்துடன் தயாரிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.



அச்சுவெல்லம், மண்ட வெல்லத்தில் மைதா, சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், செயற்கை வண்ணம் சேர்க்கும் வேதிப்பொருள், சோடியம் ஹைட்ரோ சல்பேட் கலப்படமாக சேர்க்கப்படுகின்றன.

கலப்படமில்லாத கருப்பட்டி பொதுவாக கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் கலப்பட கருப்பட்டி, மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.

ஆனால் மக்களுக்கு இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் பழுப்பு நிற கருப்பட்டியைவிட மற்ற நிற கருப்பட்டி நல்லதாக நினைக்கின்றனர். ஆனால் அவை உடல் நலத்திற்கு பாதிப்பை தரும் நிறமிகள் சேர்க்கப்பட்டவை ஆகும். இவற்றை தயாரிப்பவர்கள், சந்தையின் தேவைக்கு ஏற்ப கண்ணை கவரும் வண்ணங்களில் அவற்றை தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே கருப்பட்டி பற்றிய விழிப்புணர்வை மக்களிடமும், உற்பத்தியாளர்களிடமும் ஏற்படுத்துவது தற்போது அவசியமாகிறது. மேலும், கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களுக்கு சென்று, கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை சோதனை செய்வதும் அவசியமாகிறது.

இந்த கலப்படத்தை தடுப்பதற்காக மாநில அளவில் கண்காணிப்பு குழுவை உணவு பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் அமைத்து உத்தரவிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக சென்னையில் கடந்த ஜூன் மாதம் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்றது.

வெல்லம், கருப்பட்டி போன்றவை விவசாய நிலங்களின் அருகே சிறிய உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அங்கு தரமான வகையில் மண்டவெல்லம், அச்சுவெல்லம், பனங்கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு. கேமராக்களை பொருத்த வேண்டும்.

கலப்பட கருப்பட்டி பற்றி பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை மக்களிடையே கலெக்டர்கள் பிரபலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News