உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்- எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2021-12-01 10:03 GMT   |   Update On 2021-12-01 10:03 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ் மகன் உசேனை வாழ்த்தி செயற்குழு கூட்டத்தில் பேசினார்கள்.
சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை அவைத் தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது.

இதையடுத்து அ.தி.மு.க. தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு அவரது தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருபவர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவி உள்பட பல்வேறு பொறுப்புகளை தமிழ்மகன் உசேன் வகித்துள்ளார்.

தற்போது மிக முக்கிய பொறுப்பான அவைத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ் மகன் உசேனை வாழ்த்தி செயற்குழு கூட்டத்தில் பேசினார்கள்.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அவருடன் கையெழுத்திட்ட 11 பேரில் தமிழ்மகன் உசேனும் ஒருவர். எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக முதன் முறையாக நியமிக்கப்பட்டவர் இவர்தான்.

17 வருடம் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். 47 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். மன்றத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

2011-ம் ஆண்டு அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்மகன் உசேனை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

2012-ம் ஆண்டு ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், வக்பு வாரிய குழு தலைவராகவும் தமிழ் மகன் உசேன் பதவி வகித்துள்ளார். குமரி மாவட்ட எல்லை போராட்டத்தில் பங்கேற்றும் அவர் சிறை சென்றுள்ளார். தற்போது வரை எல்லை போராட்ட வீரருக்கான உதவித்தொகையை தமிழ் மகன் உசேன் பெற்று வருகிறார்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து வரும் தமிழ்மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து அவைத்தலைவர் என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். 2021-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News