உள்ளூர் செய்திகள்
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுவதையும், மருத்துவமுகாம் நடைபெற்று வருதையும் படத்தில் காணலாம்.

திருப்பூரில் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி-மேலும் 7 பேர் சிகிச்சைக்கு அனுமதி

Published On 2021-12-01 09:45 GMT   |   Update On 2021-12-01 09:45 GMT
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமடைந்தது சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருப்பூர்:

திருப்பூர் மங்கலத்தை அடுத் துள்ள சுல்தான்பேட்டை, வெங்கடேஸ்வராநகர் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவனுக்கு கடந்த மாதம் 10ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று  அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமடைந்தது சிகிச்சை பலனின்றி பலியானார்.

பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் குறித்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் சேகர் உள்ளிட்டோர்  ஆய்வு செய்தனர்.

அப்பகுதி முழுவதும் தூய்மை பணி மேற்கொண்டு கொசுமருந்து தெளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தபகுதியில் மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது. இதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதேபோல் திருப்பூர் மாநகரில் மழை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.

திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், உடுமலை காந்திநகர் வி.கே.பி. நகரை சேர்ந்த 7 வயது சிறுவன், திருப்பூர் அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த  2வயது சிறுவன், திருப்பூர் காங்கயம் சாலை பாளையக்காட்டை சேர்ந்த 42 வயது ஆண், உடுமலை முக்கோணம் புளியங்காட்டை சேர்ந்த 4 வயது சிறுவன், திருப்பூர் காந்தி நகர் ஈபி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி, திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 7 பேர்ருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து மாநகர் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்டலம் வாரியாக தனி பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News