உள்ளூர் செய்திகள்
* * * நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சி.

கேரளாவுக்கு 1¾ ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து இன்று தொடங்கியது

Published On 2021-12-01 09:34 GMT   |   Update On 2021-12-01 09:34 GMT
தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து இன்று காலை முதல் கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. சுமார் 1¾ ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை முதல் கேரளாவுக்கு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றது.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.

கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் குறையாததால் அந்த மாநிலத்திற்கு மட்டும் போக்குவரத்து நடக்கவில்லை.

பிற மாநிலங்களுக்கு போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் கேரளாவுக்கும் போக்குவரத்து தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்-அமைச்சர், இன்று முதல் கேரளாவுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கினார்.

தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து இன்று காலை முதல் கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. சுமார் 1¾ ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை முதல் கேரளாவுக்கு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றது.

நேற்று வரை கேரளாவில் இருந்து வந்த பஸ்கள் குமரி எல்லையான இஞ்சி விளையில் நிறுத்தப்பட்டன. இதுபோல இங்கிருந்து சென்ற பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

இன்று காலை முதல் தமிழக பஸ்கள் கேரளாவுக்கு சென்றது. திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு 40 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுபோல கேரளாவில் இருந்து மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு 25 பஸ்கள் இயக்கப்பட்டது.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையிலேயே கேரள பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்ல தயார் நிலையில் நின்றது. இதுபோல தமிழக அரசு பஸ்களும் புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

இரு மாநில பஸ்களிலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவின் உட்புற நகரங்களுக்கு வழக்கமான பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.

பயணிகள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கும், அலுவலக பணிகளுக்காகவும் சென்று வருகிறார்கள்.

மேலும் தோட்ட வேலைக்கும், கட்டிட பணிக்கும் தொழிலாளிகள் கேரளாவுக்கு செல்கிறார்கள். பஸ் போக்குவரத்து நடைபெறாததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியதால் இனி சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியும், என்றனர். பஸ் போக்குவரத்து தொடங்கினாலும், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
Tags:    

Similar News