உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-12-01 06:16 GMT   |   Update On 2021-12-01 06:16 GMT
தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உள்ளன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலும், பிற சான்றுகளின் அடிப்படையிலும் தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று 1921-ம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி விவாதித்த 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும், சான்றோர்களும் அறிவித்தனர்.

அதன்பின்னர், 1939-ம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார் உள்ளிட்டோர் பங்கேற்ற அனைத்திந்திய தமிழர்கள் மாநாட்டிலும் தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. ‘‘நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு, தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!’’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் பாடியிருக்கிறார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம்புவதற்கும், அதை உலகுக்கு நிரூபிப்பதற்கும் இவற்றைக் கடந்து கூடுதல் சான்றுகள் எதுவும் தேவையில்லை.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நான் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 2011-ம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அ..தி.மு.க. அரசு, 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் நாள் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது. தைத் திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுனரின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஜனவரி மாதம் கூடும் கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலைப் பெற அவகாசம் இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags:    

Similar News