செய்திகள்
அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு- பாபநாசம் கோவில் படித்துறை மூழ்கியது

Published On 2021-11-30 10:29 GMT   |   Update On 2021-11-30 10:29 GMT
வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையார், சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அணைகளுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாபநாசம் கோவில் படித்துறை, கரையோரம் உள்ள பிள்ளையார் கோவில், சுவாமி மண்டபம் ஆகியவற்றில் வெள்ளநீர் புகுந்து ஓடுகிறது.

இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அருகில் செல்லவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை விக்கிரமசிங்கபுரம் நகராட்சியினர் ஒலிப்பெருக்கி மூலமாக தெரிவித்து, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர். இரவில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News