செய்திகள்
ரவிச்சந்திரன்

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க திருப்பூரில் திருட்டில் ஈடுபட முயன்ற போலீஸ்காரர் - தனிப்படை வலைவீச்சு

Published On 2021-11-30 08:02 GMT   |   Update On 2021-11-30 08:02 GMT
வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீஸ்காரரே திருட்டில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்-நிலை கருவூலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘லாக்கர்’ பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்டம் வலசையூரை சேர்ந்த செந்தில்குமார் (37), அவரது உறவினர் பூபாலன் (35) ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

2 பேரிடமும் நடத்திய விசாரணையில் சார்நிலை கருவூலத்தில் திருடுவதற்கு திட்டம் தீட்டி கொடுத்தது பூபாலனின் சகோதரரும், மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரரான ரவிச்சந்திரன் (37) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மாவட்ட எஸ்.பி., சசாங் சாய்  ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.

மேலும் ரவிச்சந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீஸ்காரரே திருட்டில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ரவிச்சந்திரன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. 

ரவிச்சந்திரனுக்கு ‘ஆன்லைன் ரம்மி’ விளை யாடும் பழக்கம் உள்ளது. இதில் ஏராளமான பணத்தை இழந்து வெளியில் பல இடங்களில் கடன் பெற்றிருந்தார். அதனை அடைக்க அவரது தம்பி பூபாலனை வைத்து திருட திட்டமிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் காமநாயக்கம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கோர்ட்டு போலீசாக பணியாற்றிய போது, கள்ளிபாளையத்தில் நடந்த வங்கி கொள்ளையில் பறிமுதல் செய்யப்பட்ட 100 பவுனுக்கு மேலான நகைகள் பல்லடம் சார்நிலை கருவூலத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அதனை திருட செந்தில்குமார், பூபாலனுக்கு  திட்டம் வகுத்து கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ரவிச்சந்திரனை பிடித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.  
Tags:    

Similar News