செய்திகள்
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக திருப்பூரில் புகைமருந்து அடிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் பாதிப்பு-தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-11-30 07:25 GMT   |   Update On 2021-11-30 07:25 GMT
அவிநாசியின் நகர மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் வீதம் பாதிக்கப் படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று திருப்பூர் காங்கயம்பாளையம் மீனாட்சிநகரை சேர்ந்த 10 வயது சிறுமி, ஊத்துக்குளி ரோடு பண்டிட்நகரை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுமி ஆகிய 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மழைக்காலமாக இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. வீடுகளை சுற்றியுள்ள கழிவுப்பொருட்களில் தேங்கும் மழைநீரில் இருந்தே டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொசு ஒழிப்பு பணிகளில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி பிரதீப் கிருஷ்ணகுமார் கூறும்போது, இந்த மாதத்தில் இதுவரை மாநகராட்சி பகுதியில் 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாநகராட்சியை ஒப்பிடும்போது இது குறைவு. இருப்பினும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். வீடு, வீடாக சென்று செவிலியர்கள் கணக்கெடுப்பு செய்கிறார்கள்.கொசு புகை மருந்து அடிப்பது, வீடுகளில் உள்ள தண்ணீரில் அபெட் மருந்து ஊற்றும் பணிகள் தொடர்கிறது.

வாரத்துக்கு சராசரியாக 3 பேர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் காய்ச்சல் முகாம், கொரோனா சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏபடுத்தப்படுகிறது என்றார்.

அவிநாசியின் நகர மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் உட்பட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல ஊராட்சிகளில் இப்பணிகள் துவங்கிவிட்டது. சில ஊராட்சிகளில் துவங்கவில்லை.அவிநாசியில் டெங்கு தென்பட்ட காமராஜ் நகரில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கொசு மருந்து தெளித்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News