செய்திகள்
மழை

தமிழகத்தில் படிப்படியாக மழைப்பொழிவு குறையும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-11-30 03:40 GMT   |   Update On 2021-11-30 03:40 GMT
குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
சென்னை:

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருந்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்சியின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால், மிக கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே டிசம்பர் 3-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின்னர் தமிழகத்தில் படிப்படியாக மழைப்பொழிவு குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் கூறுகையில், ‘தற்போது குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகரக்கூடும். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி குஜராத் கடல் பகுதியில் மையம் கொள்ளும். இதனால் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு இருக்கும். எனவே தமிழ்நாட்டில் மழைவாய்ப்பு இருக்காது.’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News