செய்திகள்
நளினி

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-11-30 01:51 GMT   |   Update On 2021-11-30 01:51 GMT
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார், இதற்கு தமிழக அரசு 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் அளித்த தமிழக அரசு நளினி தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னரின் செயல்பாடு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. நளினியை விடுதலை செய்ய கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை’’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது’’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார், இதற்கு தமிழக அரசு 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News