செய்திகள்
கோப்புபடம்

வெளிநாடுகளில் ஆடைகள் நேரடி கண்காட்சி - புதிய ஆர்டர்களை பெற திருப்பூர் உற்பத்தியாளர்கள் தீவிரம்

Published On 2021-11-29 06:52 GMT   |   Update On 2021-11-29 06:52 GMT
இந்தியா - ஜப்பான் இடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் இந்திய ஆயத்த ஆடை ரகங்களை வரியின்றி இறக்குமதி செய்யலாம்.
திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் புதிய வர்த்தக சந்தைகளை கைப்பற்ற வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிகள் கைகொடுக்கின்றன. தாங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான ஆடை ரகங்களை கண்காட்சிகளில் இடம்பெறச்செய்து வர்த்தகர் களிடமிருந்து மொத்த ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை கைப்பற்றுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக நேரடி கண்காட்சிகள் நடத்தப்படவில்லை. சர்வதேச கண்காட்சிகள் வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் நேரடி ஆயத்த ஆடை கண்காட்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் அடுத்தடுத்து கண்காட்சிகள் நடைபெற உள்ளன. 

வட அமெரிக்காவின் பிரசித்திபெற்ற மேஜிக் பேர் கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1,600க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்த உள்ளன.

உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பங்கேற்று ஆர்டர் வழங்குவதற்கான விசாரணைகள் நடத்த உள்ளனர். இந்திய ஆடை ஏற்றுமதிக்கு பாரம்பரிய சந்தையாக பிரிட்டன் உள்ளது. 

ஐரோப்பாவில் இருந்து பிரிந்துள்ளதையடுத்து அந்நாட்டுக்கான ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. பியூர் லண்டன் பேர் என்ற பெயரில் ஆயத்த ஆடை கண்காட்சி 2022 பிப்ரவரி 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. 

பிரிட்டன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சர்வதேச பிராண்டட் ஆடை வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர்.

‘கூஸ் நெக்ஸ்ட் பேர் பாரீஸ்’ கண்காட்சி  வருகிற ஜனவரி 21-ந்தேதி   பிரான்ஸ் நாட்டில் தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், பிராண்டட் நிறுவனத்தினர் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்துகின்றனர்.

தி ஜப்பான் இந்தியா இன்டஸ்ட்ரி புரமோஷன் அசோசியேஷன் (ஜிப்பா) சார்பில், ‘இந்தியா டெக்ஸ் டிரெண்ட்’ கண்காட்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 2022 பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தியா - ஜப்பான் இடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் இந்திய ஆயத்த ஆடை ரகங்களை வரியின்றி இறக்குமதி செய்யலாம். இக்கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் ஜப்பான் சந்தைக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க முடியும்.

மேற்கண்ட 4 கண்காட்சிகளிலும் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று ஆடை ரகங்களை காட்சிப்படுத்த ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது. புதிய சந்தை வாய்ப்புக்களை தேடும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கண்காட்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 94422 89222 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய ஆர்டர்களை பெற திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். வெளிநாட்டு வர்த்தகர்களை கவரும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்த மாதிரி ஆடை ரகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

Similar News