செய்திகள்
ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தி.மு.க.விற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று: ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்.

Published On 2021-11-28 08:28 GMT   |   Update On 2021-11-28 08:28 GMT
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க.வின் மிரட்டப்பட்டு தி.மு.க.-வில் சேர்க்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கண்டன அறிக்கை வருமாறு:-

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22-10-2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கடந்த 21-10-2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.

மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் நாளான 22-10-2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார்.

தேர்தல் அதிகாரி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டார். கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல்துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

அதன் பிறகு, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து கொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு 2-வது வார்டு உறுப்பி னர் ஆ. அலமேலு கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் இரண்டு பொய் வழக்குகளை போட்டுள்ள னர்.

அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே, தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18-11-2021 அன்று திமுகவில் சேர்ந்து விட்டனர்.

அதேபோல், கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு 10-வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதாக மிரட்டியும்; ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில்வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து 23.11.2021 அன்று நல்லமுத்து வடிவேல் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத் தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழகத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் தி.மு.க.வில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் தி.மு.க.வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு தி.மு.க.வினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தி.மு.க.விற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

மேலும், அரசியல் ரீதியாக அ.தி.மு.க.-வை சந்திக்க முடியாத தி.மு.க.வை வன்மையாகக் கண்டிக்கிறோம்

இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்,
Tags:    

Similar News