செய்திகள்
தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-11-28 07:50 GMT   |   Update On 2021-11-28 07:50 GMT
லண்டன் தமிழ்ச்சங்கம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை அடையாறில் 12வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடையாறு ஆறு மற்றும் மல்லிப்பூ காலணிப்பகுதியில், வெள்ளதடுப்பு பணி மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

பருவமழை காலத்தில் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் தமிழ்ச்சங்கம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது:-



78 லட்சத்திற்கும் அதிகமானோர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் 12வது மெகா முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 77.33 சதவீதம் எனவும், 42.01 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக்கொண்டனர்.

பொதுவெளியில் கலந்து கொள்வோர் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுபானக் கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும். எனவே டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கடுமையாக பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News